மனைவியின் நகையை பறித்துக்கொண்டு ஓடிய திருடனை விரட்டிச்சென்ற கராத்தே மாஸ்டர் பரிதாப சாவு

கோபி அருகே மனைவியின் நகையை பறித்துக்கொண்டு ஓடிய திருடனை மோட்டார்சைக்கிளில் விரட்டிச்சென்று பிடிக்க முயன்றபோது அதில் இருந்து தவறி விழுந்த கராத்தே மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-08-11 23:15 GMT
கடத்தூர்,

கோபி அருகே உள்ள சவண்டப்பூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 53). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் கராத்தே மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மங்கையர்க்கரசி (50). இவர்களுடைய மகன் சாணக்யா (13). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் வீட்டின் கதவை திறந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்தார். பின்னர் அந்த நபர் நைசாக மங்கையர்க்கரசியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்த தப்ப முயன்றார்.

இதில் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தெழுந்த மங்கையர்க்கரசி, மர்ம நபரை கண்டதும் ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த விழித்த சந்திரனும், அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றார்.

அதற்குள் அந்த திருடன் வீட்டை விட்டு வெளியேறி ரோட்டில் ஓடினான். இதனால் அவர் அந்த மர்ம நபரை விரட்டினார். ஆனால் அந்த மர்ம நபர் வேகமாக ஓடிவிட்டார். இதனால் அவர் வீட்டுக்கு வந்து மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரை விரட்டிச்சென்றார். வீட்டை விட்டு சிறிது தூரம் சென்றதும் அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து திடீரென கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்