தேரா தலைமையகத்திற்குள் நுழைய ராணுவத்திற்கு உத்தரவு கிடையாது

தேரா தலைமையகத்திற்குள் நுழைய ராணுவத்திற்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Update: 2017-08-26 10:59 GMT

சிர்சா, 

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்பு படைகள் அங்கு தொடர்ந்து உஷார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சிரிசாவில் உள்ள தேரா தலைமையகத்தில் சாமியார் குர்மீத் ராமின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் கூடி உள்ளனர். காலை ராணுவம் தலைமையகம் நோக்கி செல்கிறது என தகவல்கள் வெளியாகியது. ஆதரவாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தேரா தலைமையகத்திற்குள் நுழைய ராணுவத்திற்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

சரிசா சப்-டிவிஷ்னல் மாஜிஸ்திரேட் பிராம்ஜித் சிங் பேசுகையில், “தேரா தலைமையகத்திற்குள் நுழைய ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ராணுவம் அங்கு நிலைநிறுத்தப்பட்டு உள்ளது ஊரடங்கு உத்தரவு அமல் காரணமாகவே,” என கூறிஉள்ளார். இதற்கிடையே சாமியாருக்கு சொந்தமான பிற பிரார்த்தனை மையங்களில் சோதனை நடத்தவும், ஆயுதங்கள் தென்பட்டால் பறிமுதல் செய்யவும் அரசு உத்தரவிட்டு உள்ளது. தேரா தலைமையகத்திற்கு வெளியே பாதுகாப்பு படைகள் வேலியாக நிற்க வைக்கப்பட்டு உள்ளது.

சட்டத்தை கையில் எடுத்தவர்களை தப்பிக்கவிட மாட்டோம், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வன்முறை தொடர்பாக போலீஸ் தெரிவித்து உள்ளது. நேற்று இரவே ராணுவத்திடம் தேரா முகாம்கள் தொடர்பான வரைபடங்கள் கொடுக்கப்பட்டு விட்டது என தகவல்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்