சிறுவன் ஓட்டிய கார் விபத்து: டிரைவரை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்த தாத்தா அதிரடி கைது

சிறுவனுக்கு பதிலாக கார் ஓட்டியதாக டிரைவரை மிரட்டி போலீசில் ஆஜராக வைத்ததாக அவனது தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-05-25 21:41 GMT

புனே,

மராட்டிய மாநிலம் புனே கல்யாணி நகர் பகுதியில் கடந்த 19-ந் தேதி 17 வயது சிறுவன் மதுபோதையில் அதிவேகமாக ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதி ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனை 300 வார்த்தையில் கட்டுரை எழுத சொல்லி ஜாமீனில் விடுவித்த சம்பவம் பொதுமக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த வழக்கில் சிறுவனின் தந்தையான ரியல் எஸ்டேட் அதிபர் விஷால் அகர்வாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே விபத்தின் போது நான் தான் காரை ஓட்டியதாக சிறுவனின் வீட்டு கார் டிரைவர் ஆஜரான சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிறுவனை காப்பாற்றவே திட்டமிட்டு டிரைவர் ஆஜராகியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில் புனே கார் விபத்து வழக்கில் சிறுவனை தப்பவைக்க முயற்சிகள் நடந்ததாக புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் ஒப்புக்கொண்டு இருந்தார்.

இதற்கிடையே புனே கார் விபத்தில் சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தன்னை மிரட்டி வழக்கில் ஆஜராக வைத்ததாக டிரைவர் ஏரவாடா போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் தற்போது சிறையில் உள்ள சிறுவனின் தந்தை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறுவனுக்கு பதிலாக தான் காரை ஓட்டியதாக போலீசில் ஒப்புக்கொள்ளுமாறு டிரைவரை சிறுவனின் தந்தை, தாத்தா மிரட்டி உள்ளனர். மேலும் அவர்கள் டிரைவரின் செல்போனை பறித்துக்கொண்டு, தங்களின் பங்களா வீட்டில் அடைத்து வைத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்