ஆஸ்பத்திரியில் ம.நடராஜன் அனுமதி: சசிகலா பரோலில் வர விண்ணப்பிக்கவில்லை

சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வர விண்ணப்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2017-09-11 23:00 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல்நல குறைவு காரணமாக சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை

இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராஜனை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள சசிகலா சிறையில் இருந்து பரோலில் வெளியே வர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சசிகலா பரோலில் வெளியே வருவதற்கு விருப்பம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

சிறையில் இருந்து பரோலில் வெளியே வருவதற்காக சசிகலா தரப்பில் விண்ணப்பிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதுபற்றி கர்நாடக மாநில அ.தி.மு.க. (அம்மா) அணியின் செயலாளர் புகழேந்தி கூறுகையில், ‘சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதற்கு பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. பரோலில் வருவதற்கு அவர் விரும்பவில்லை. அவர் பரோலில் வெளியே வர இருப்பதாக வந்த தகவல் உண்மையல்ல’ என்றார்.

சந்திப்பு இல்லை

இதற்கிடையில் சிறையில் சசிகலாவை அவரது ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் நேற்று சந்தித்து பேச இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் நேற்று சசிகலாவை அவரது ஆதரவாளர்களோ, எம்.எல்.ஏ.க்களோ சந்தித்து பேசவில்லை.

மேலும் செய்திகள்