காந்தி கொலை வழக்கு: மனுதாரர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்யக்கோரிய மனுதாரர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Update: 2018-01-12 22:15 GMT

புதுடெல்லி,

தேசத் தந்தை மகாத்மா காந்தி 1948–ம் ஆண்டு ஜனவரி மாதம் 30–ந்தேதி நாதராம் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை மறு விசாரணை செய்யக் கோரி மும்பையைச் சேர்ந்த பங்கஜ் பத்னிஸ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேசுவரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–

மனுதாரராகிய நீங்கள் 3 கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும். முதலில், மகாத்மா காந்தி இறந்து இவ்வளவு காலம் கழித்து வழக்கை தொடர்ந்தது ஏன்?... இன்னொன்று இந்த வழக்கின் மீதான தகுதி பற்றியது... மூன்றாவதாக இத்தனை காலம் கழித்து வழக்கை தொடர்ந்தால், இந்த சம்பவம் தொடர்புடைய ஒவ்வொரு சிறு சிறு ஆதாரங்களையும் இழந்துவிட வாய்ப்பு உண்டுதானே?...

மிகப்பெரிய மனிதர்கள் தொடர்பாக வழக்கு தொடரும்போது, ஆதாரங்கள் இன்றி தொடரக்கூடாது. வழக்கை நடத்துவதற்கு உரிய தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே வழக்கை நடத்த இயலும். எனினும், கோர்ட்டு இதில் சட்டவிதிகளின்படி நடந்து கொள்ளும். இதில் வழக்கு தொடர்ந்தவர் யார் என்றெல்லாம் பார்க்காது. மனுதாரர் கோர்ட்டு எழுப்பிய கேள்விகளுக்கு 4 வாரத்துக்குள் கோர்ட்டு நியமித்த உதவியாளரிடம் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்