காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் நிதிஷ் குமார் அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்

காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Update: 2018-08-07 09:58 GMT
பாட்னா,

பீகாரின் முசாபர்பூரில், மாநில அரசின் நிதியுதவி பெறும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவிபெற்று காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தங்கியிருந்த சுமார் 34 சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்த பலாத்கார சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்த போது மத்திய மற்றும் பீகார் மாநில அரசுக்கள் விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது நிதிஷ் குமார் அரசை கடுமையாக கடிந்து கொண்டது சுப்ரீம் கோர்ட்டு. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வரும் விவகாரத்தில் கவலையை தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, என்சிஆர்பி அறிக்கையின்படி ஒவ்வொரு  6 மணிநேரத்திற்கும் இந்தியாவில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார் என்பதை காட்டுகிறது என தெரிவித்தது.

பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வியை எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு, அரசு நடவடிக்கையை எடுக்காதது ஏன்? பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்காதது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. காப்பகம் நடத்திய தொண்டு நிறுவனத்திற்கு அரசு நிதி வழங்கியது ஏன் என்றும் காட்டமாக சாடியுள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு அரசு நிதி உதவியை வழங்கவில்லை என்றும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்