கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு, ஓணம் திருவிழா ரத்து

கேரளாவில் ஒரு வாரமாக இடைவிடாமல் கொட்டும் கனமழையால் ஓணம் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-14 15:06 GMT

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

இங்கு தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் முகாம்கள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வீடு, வாசல்களை இழந்த இவர்களின் கைகளில் ஒரு காசு கூட இல்லாததால் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் 50 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடந்த 8-ந்தேதி தொடங்கிய கனமழை இன்று வரையில் நீடிக்கிறது. மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் கடந்த 6 நாட்களில் 39 பேர் இறந்துள்ளனர். 20 ஆயிரம் வீடுகளும், 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகளும் சேதமடைந்துள்ளன. பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அய்யப்பன் கோவிலில் நாளை நிராபுத்திரி பூஜை நடக்க இருக்கிறது. 

எச்சரிக்கை பற்றி தெரியாமல் சபரிமலைக்கு வரும் பக்தர்களை அடிவாரத்தில் உள்ள நிலாக்கல் பகுதியில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 18-ந்தேதி வரை சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் மாநிலம் உருகுலைந்து கிடக்கும் நிலையில் ஓணம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில மந்திரிசபை கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி பினராயி விஜயன், கேரள வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 27 அணைகளை திறக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் ராணுவம் உள்பட பாதுகாப்பு படை வீரர்கள் இரவு, பகல் பாராமல் சேவையாற்றி வருகிறார்கள். மழை வெள்ள சேதத்தால் ரூ.8,316 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. பேரிழப்பை ஈடுகட்டும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அரசியல் கட்சிகள், திரைப்பட அமைப்புகள், நடிகர், நடிகைகள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

 2 தினங்களுக்கு மேலாக தண்ணீர் சூழ்ந்துள்ள வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வரையும், நிலம் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையும் வழங்கப்படும். மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக ஓணத்தையட்டி அரசு சார்பில் நடைபெற இருந்த அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்