கொச்சி அருகே பல்கலைக்கழகத்தில் சிக்கிய 600 மாணவர்கள் மீட்பு

கொச்சி அருகே பல்கலைக்கழகத்தில் சிக்கிய 600 மாணவர்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2018-08-18 22:30 GMT
திருவனந்தபுரம்,

மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள கேரளாவில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் வீடுகளின் மொட்டை மாடிகளிலும், மேற்கூரைகளிலும் சிக்கித்தவித்த ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று மீட்கப்பட்டனர்.

இதில் சிறப்பு அம்சமாக, கொச்சி அருகே காலடியில் உள்ள ஸ்ரீ சங்கராச்சாரியா பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றில் கடந்த 2 நாட்களாக தவித்து வந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்களை நேற்று மீட்புக்குழுவினர் மீட்டனர். இதைப்போல எர்ணாகுளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோரும் மீட்கப்பட்டனர்.

இடுக்கியில் நேற்று மீண்டும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பன்டனாடு, அரண்முலா, நென்மரா போன்ற பகுதிகளில் ஏராளமான பிணங்கள் வெள்ளத்தில் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவை, நிலச்சரிவால் மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகள் ஆகும். இதற்கிடையே மாநிலத்தில் 134 பாலங்கள், 16 ஆயிரம் கி.மீ. பொதுப்பணித்துறை சாலைகள், 82 ஆயிரம் கி.மீ. கிராம சாலைகள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாகவும், இதன் மூலம் ரூ.21 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்