சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் சிறுவனை கடத்திய பெண் கைது - 24 மணி நேரத்தில் சிக்கினார்

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் சிறுவனை கடத்தி சென்ற பெண் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-06 21:45 GMT
மும்பை,

தானே திவாவை சேர்ந்தவர் அனில். இவரது மனைவி விமலா (வயது35). இவர்களுக்கு 2 வயதில் சன்னி என்ற மகன் இருக்கிறான். நேற்றுமுன்தினம் அவுரங்காபாத் செல்ல விமலா தனது மகனுடன் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்திற்கு வந்தார். ரெயில் புறப்பட நேரம் இருந்ததால் ரெயில் நிலைய வளாகத்தில் மகனுடன் தூங்கினார். இந்தநிலையில் இரவு விமலா திடீரென கண் விழித்தார். அப்போது தன்னுடன் உறங்கிக்கொண்டிருந்த மகன் காணாமல் போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உடனே சம்பவம் குறித்து தனது கணவர் அனிலை தொடர்புகொண்டு தெரிவித்தார். இதைக்கேட்டு பதறிப்போன அவர் உடனே ரெயில் நிலையத்துக்கு அலறி அடித்தபடி ஓடிவந்தார்.

பின்னர் கணவர், மனைவி இருவரும் ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் உடனடியாக அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் ஒரு பெண் சிறுவனை தூக்கிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனை தூக்கிச்சென்ற பெண் நாலச்சோப்ரா ரெயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் ஆட்டோவின் பதிவு எண்ணை அடையாளம் கண்டு துலிஞ்ச் பகுதியில் இறங்கிய பெண்ணை பிடிக்க விசாரணை நடத்தினர். இதில் சிறுவனை கடத்திய பெண் பெயர் பார்வதி தேவி (40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து சிறுவனை பத்திரமாக மீட்டனர். மேலும் அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் திருமணம் ஆகி 20 வருடம் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பார்வதி தேவி சிறுவனை கடத்தியது தெரியவந்தது. தனது கணவரிடம் ஆதரவற்ற இல்லத்தில் இருந்து சிறுவனை தத்தெடுத்து வந்ததாக பொய் கூறியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் சிறுவனை கடத்திய 24 மணி நேரத்தில் போலீசார் பார்வதி தேவியை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துரித நடவடிக்கை எடுத்து சிறுவனை மீட்ட போலீசாரை, போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தம் காரட் பாராட்டினார்.

மேலும் செய்திகள்