வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் மாசு ஏற்படுத்திய விவகாரத்தில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2019-01-17 06:07 GMT
புதுடெல்லி,

வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் இந்தியாவில் 3.23 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.  இந்த நிறுவனம் தனது வாகனங்களில் காற்று வெளியேற்றும் சோதனையில் மோசடி செய்யும் வகையிலான கருவியை பயன்படுத்தி விதிகளை மீறியிருந்தது என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மோசடி கருவியானது டீசல் என்ஜின்களில் இருந்து காற்று வெளியேறும் அளவை குறைத்து காட்டி உலக அளவில் காரின் செயல்திறனை உயர்த்தி காட்டும் வகையிலான சாப்ட்வேராக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தியது பற்றிய விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 16ல் உத்தரவு ஒன்று பிறப்பித்து இருந்தது.  இதில் வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி தொகையை இடைக்கால தொகையாக செலுத்தும்படி நீதிபதி ஆதர்ஷ் குமார் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராத தொகையை நாளை மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்