பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்தார் ராமமோகன ராவ்

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜனசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

Update: 2019-02-12 05:13 GMT
விஜயவாடா,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தலைமை  செயலாளராக இருந்தவர் ராமமோகன ராவ்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த நிகழ்வில் ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் முன்னிலையில் ராம மோகன ராவ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கட்சியில் அரசியல் ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 

கட்சியில் இணைந்த பிறகு அவர் பேசுகையில், ஒரு நல்ல அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்பினேன். பவன் கல்யாணை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்பது ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஜெயலலிதாவின் திறமையை பவன் கல்யாணிடம் பார்க்கிறேன். ஜெயலலிதா ஒரு அரசியல்வாதியின் இதயம் மக்களுடன் இருக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தார். பவன் கல்யாண் அதே போல் தான் என்று நினைக்கிறேன். அவர் ஒரு நட்சத்திரம் என்றாலும், அவர் ஒரு மனிதனின் மனிதர், நான் மேடத்திடம்  பணியாற்றியது போலவே பவனுடன் இருப்பேன் என கூறினார்.

தமிழக அரசின் தலைமை செயலாளராக ராமமோகன ராவ் இருந்த போது  தொழில் அதிபர் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். பிறகு சேகர் ரெட்டி கைதானார். 

அதன் தொடர்ச்சியாக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் ராம மோகனராவின் வீட்டில் இருந்து ரூ.5 கோடி தங்கம், ரூ.30 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்