பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு - அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து உத்தரபிரதேச அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-08-23 22:21 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண்சிங் உள்ளிட்டோரை விடுவித்து 2001-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. அதன்பேரில், அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கவும், வழக்கை ரேபரேலி கோர்ட்டில் இருந்து லக்னோ தனி கோர்ட்டுக்கு மாற்றவும், தினசரி விசாரணை நடத்தி 2 ஆண்டுகளுக்குள் விசாரணையை முடிக்குமாறும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

லக்னோ தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் வருகிற 30-ந் தேதி ஓய்வுபெறுவதால் வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கோரியதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டதுடன், 9 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பாலி நாரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது உத்தரபிரதேச அரசின் கோரிக்கையை ஏற்று தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திரகுமார் யாதவுக்கு 2 வாரங்களில் பதவி நீட்டிப்பு வழங்கும் ஆணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

நீதிபதி சுரேந்திரகுமார் சுப்ரீம் கோர்ட்டுக்கு எழுதியிருந்த கடிதத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்துவரும் தனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த கடிதத்தை வாசித்த நீதிபதி பாலி நாரிமன், நீதிபதிக்கு மிகவும் பெரிய அளவில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய பாதுகாப்பும் மிகவும் அவசியமாகிறது. எனவே, அவருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து உத்தரபிரதேச அரசு 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்