ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு; ப. சிதம்பரத்தின் காவல் 30ந்தேதி வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் காவல் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-08-26 11:56 GMT
புதுடெல்லி.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

பின்னர் அவரை தங்கள் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை 26-ந் தேதி (இன்று) வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை இன்று ஆஜர்படுத்த ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

5 நாட்களும் சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.  சிதம்பரத்தின் காவலை மேலும் 5 நாட்கள்  நீட்டிக்கக்கோரி  நீதிமன்றத்தில்  சி.பி.ஐ. மனுதாக்கல் செய்து உள்ளது.

காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற சி.பி.ஐ.யின் கோரிக்கைக்கு ப.சிதம்பரம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

அமலாக்க துறை சில தகவல்களை  வழங்கி உள்ளதால்  அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது.

5 நாட்கள் காவலில் எடுத்ததில், ப.சிதம்பரத்திடம்  என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விளக்க வேண்டும் என்று  சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுவரை நடந்த விசாரணை விவரத்தை சி.பி.ஐ. தெளிவாக விளக்க  வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் கூறியது.

கபில் சிபல் வாதிடும் போது, எதோ ஒரு சில துண்டு சீட்டை காட்டி விட்டு ஆதாரம் என்கிறார்கள், உண்மையான  ஆதாரம் இருந்தால் கொடுக்கலாமே? எந்த ஆதாரத்தையும் காட்டாமல் ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றால் எப்படி என கூறினார்.

சி.பி.ஐ. தரப்பில் வாதிடும் போது,  வெளிநாட்டு  வங்கிக்கணக்கு தொடர்பாக அமலாக்கத்துறைதான் விசாரிக்கும் என்று கூறப்பட்டது.  இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் காவல் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்