கோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது

கோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு மாணவரை கும்பல் ஒன்று கத்தியால் குத்திய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2020-01-21 05:50 GMT
பனாஜி,

கோவாவில் டோனா பவுலா பகுதியருகே கோவா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.  இங்கு ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மதிஹுல்லா ஆரியா (வயது 24) என்பவர் எம்.காம் பட்ட மேற்படிப்பு படித்து வந்துள்ளார்.

இவர் மீது மர்ம கும்பல் ஒன்று திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.  இதில் படுகாயமடைந்த அவர் டோனா பவுலா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மராட்டியத்தில் வசித்து வரும் சதீஷ் நீல்காந்தே என்பவரை பனாஜி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  தாக்குதலுக்கான பின்னணி தெரியவரவில்லை.  இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  தப்பியோடிய 3 குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த நபர்கள் சிலர் கம்புகள் மற்றும் இரும்பு தடிகளுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தாக்கியதுடன் பொருட்சேதமும் ஏற்படுத்தினர்.

இதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மாதத்தில் நடந்த போராட்டத்தில் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் வன்முறை ஏற்பட்டது.

இந்நிலையில், கோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு மாணவரை கும்பல் ஒன்று கத்தியால் குத்தி வன்முறையில் ஈடுபட்டு உள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்