டெல்லி வன்முறை: உளவுத்துறை அதிகாரி மரணம் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் மீது கொலை வழக்கு

டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-02-28 05:44 GMT
புதுடெல்லி 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் தலைநகர் டெல்லியில்  ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.

சில இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவுத்துறை அதிகாரி உள்பட  38 பேர் பலியாகி உள்ளனர்.

வடகிழக்கு டெல்லி சந்த்பாக் பகுதியில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா என்பவர் அவரது வீட்டின் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார்.  உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா மரணத்திற்கு அவரது குடும்பத்தினர்  ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தாஹிர் உசேன் தான் காரணம் என  குற்றம் சாட்டி உள்ளனர். இதை தொடர்ந்து டெல்லி போலீசார் நேற்று தாஹிர் உசேனுக்கு எதிராக கொலை மற்றும் கலவர வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அங்கித்  சர்மா மாயமானார். அவரது உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது. டெல்லி போலீசில் பணிபுரியும் அவரது தந்தை ரவீந்தர் சர்மா, தனது மகன் கலவரக்காரர்களால் கடத்தப்பட்டு  ஆம் ஆத்மி  தாஹிர் உசேனுக்கு சொந்தமான ஒரு கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் தாஹிர் ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர்களிடமிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்