கேரளாவில் ஊரடங்கை நீட்டிக்க நிபுணர்கள் குழு சிபாரிசு

கேரளாவில் ஊரடங்கை நீட்டிக்க நிபுணர்கள் குழு சிபாரிசு செய்து இருக்கிறது.;

Update:2020-04-09 02:35 IST
திருவனந்தபுரம், 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. வருகிற 14-ந் தேதிவரை அது நீடிக்கிறது.

கேரளாவில் இந்த ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமா? அல்லது தளர்த்தலாமா? என்பது குறித்து முடிவுசெய்ய கே.எம்.ஆபிரகாம் என்பவர் தலைமையில் 17 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர்கள் குழு, தற்போது தனது அறிக்கையை கேரள அரசிடம் அளித்து இருக்கிறது.

ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பிறகு ஊரடங்கை முழுவதும் தளர்த்துவதற்கு காலம் கனிந்துவிடவில்லை. கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்று சுகாதாரத்துறை நம்பிக்கை பெற்ற பிறகே, ஊரடங்கை படிப்படியாக தளர்த்தலாம் என்று அதில் நிபுணர்கள் குழு யோசனை தெரிவித்து இருக்கிறது.

இதுதவிர அந்தக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* மற்ற நாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் நிலைமை சீரடைய வேண்டும். அதுவரை ஊரடங்கை தளர்த்தக்கூடாது.

* நீடிக்கும் ஊரடங்கால் பொருளாதார பிரச்சினை, பசி, பட்டினி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழலாம். எனவே வருவாய் மாவட்ட அளவில் போகப்போக படிப்படியான முறையில் தளர்தலாம்.

* கொரோனா சோதனை கருவிகள், செயற்கை சுவாசம் அளிக்கும் வெண்டிலேட்டர் போன்ற உயிர்காப்பு உபகரணங்கள், முக கவசங்கள் போன்ற மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்வதையும் கொள்முதல் செய்வதையும் அதிகரிக்க வேண்டும்.

* மத்திய அரசு நிதி உதவி அளிப்பதுடன், தேவையானவர்களுக்கு நிதி சென்றடைய ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

* மாநிலங்களுக்கு இடையே தேசிய ஒருங்கிணைப்பு தேவை. அனுபவங்களையும், மருத்துவ கருவிகள் மற்றும் நிதியையும் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும்.

* விவசாயத்துறைக்கு முக்கியமாக உதவி செய்யவேண்டும். விவசாய பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பாதுகாத்து பதப்படுத்துதல், வினியோகம் செய்தல் போன்றவைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

* கொரோனா பிரச்சினை நாட்டை ஆன்லைன் உலகுக்கு வேகமாக அழைத்து சென்றுவிட்டது.

கடந்த ஒரு வாரத்தில் கல்வி, நீதித்துறை, உள்ளூர் வர்த்தகம், டெலிமெடிசின் போன்றவற்றில் நாம் பெற்ற அனுபவங்களை ஊரடங்கு முடிந்த பிறகும் தொடரலாம். அது பொருளாதர ரீதியாக லாபகரமாக இருக்கும். மேற்கண்ட முக்கிய அம்சங்கள் நிபுணர்கள் குழு அறிக்கையில் இடம் பெற்று இருக்கின்றன.

மேலும் செய்திகள்