பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது லோக் ஜனசக்தி கட்சி

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய லோக் ஜனசக்தி கட்சி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

Update: 2020-10-04 22:45 GMT
புதுடெல்லி,

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க. இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்- மந்திரியாக நிதிஷ்குமார் உள்ளார். இந்த கூட்டணியில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் உள்ளது.

இந்த நிலையில் 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

இந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பா.ஜ.க ஏற்கனவே அறிவித்துவிட்டது.

ஆனால் ராம்விலாஸ் பஸ்வானின் மகனும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வானுக்கும், முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கும் இடையே மறைமுகமான மோதல்கள், அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இந்த மோதல் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே தொகுதிபங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கும், லோக் ஜனசக்தி கட்சிக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இருதய அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவரது மகன் சிராக் பஸ்வான் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுத்து வருகிறார்.

இந்தநிலையில் சிராக் பஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி கட்சியின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் நிதிஷ்குமார் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்க லோக் ஜனசக்தி கட்சி விரும்பவில்லை என்பதால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக முடிவெடுக்கப்பட்டதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி பீகார் சட்டசபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடும் என்றும், ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு எதிராக லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தேசிய அளவில் பா.ஜ.க. உடனான கூட்டணிக்கு ஆதரவாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்தவும் லோக் ஜனசக்தி எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவார்கள் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.

பீகார் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியிலினத்தைச் சேர்ந்த பெரும்பாலான வாக்குகளை லோக் ஜனசக்தி கையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் சிராக் பஸ்வானை சமாதானம் செய்யும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்