தமிழகத்தில் 10 லட்சம் வழக்குகள் வாபஸ் - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாராட்டு

தமிழகத்தில் கொரோனா விதிமீறல் தொடர்பான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Update: 2021-02-21 00:06 GMT
லக்னோ,

கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பொதுமக்கள் மீது போடப்பட்ட சுமார் 10 லட்சம் வழக்குகள், வாபஸ் பெறப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனை விரைவில் செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கொரோனா விதிமீறல் மற்றும் குடியுரிமை திருத்தச்சட்ட போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது தேர்தல் லாபம் கருதி அறிவிக்கப்பட்டது என்றாலும், நியாயமானது. இந்த அறிவிப்பு, வழக்கில் சிக்கிய அப்பாவி பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும். கோர்ட்டின் சுமையும் குறையும் என்று தெரிவித்துள்ளார்.
 
அவர் வெளிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், உத்தரபிரதேசத்திலும் இதுபோல நிலுவையில் உள்ள கொரோனா விதிமீறல் உள்ளிட்ட லட்சக்கணக்கான வழக்குகளால் மக்கள் பலரும் சோகமாகவும், குழப்பமாகவும் உள்ளனர். எனவே உத்தரபிரதேச அரசு இந்த விஷயத்தை நுண்ணுணர்வோடு அணுகி, மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்