கொரோனா தடுப்பூசி போட தயக்கம் வேண்டாம் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் தயங்க வேண்டாம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2021-02-21 02:22 GMT
காரைக்கால்,

புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றபின் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பூங்கொத்து கொடுத்து அவரை கலெக்டர் அர்ஜூன்சர்மா வரவேற்றார். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் தலைமையில் போலீசார் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற கவர்னர், கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில், முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகக் குறைவாக இருந்தது. மாவட்ட கலெக்டர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, டாக்டர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதன் விளைவாக பொதுமக்கள் பலர் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை 25 சதவீதம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரும் தயங்க வேண்டாம். இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்காக 24 நாடுகள் காத்திருக்கின்றன. 34 நாட்களில், சுமார் 1 கோடி பேர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

இன்னும் சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி இல்லாமல் போகலாம். எனவே பொதுமக்கள் தங்களுக்கான நேரம் வரும்போது, தயக்கம் இன்றி கொரோனா தடுப் பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ.க்களை, பா.ஜ.க. என கவர்னர் கூறியுள்ளது வரலாற்று பிழை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியது குறித்து கேட்டதற்கு, நான் எப்போதும் வரலாற்று சாதனை தான் படைப்பேன். பிழை செய்யமாட்டேன் என்று தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

இதையடுத்து காரைக்கால்மேட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஆகியவற்றை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார். அங்கிருந்து, காரைக்கால் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரர் கோவிலுக்கு சென்று எள் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்