யோகாசனம் என்பது அறிவியல் பூர்வமான உடற்பயிற்சி முறை - பினராயி விஜயன்

யோகாசனம் என்பது அறிவியல்பூர்வமான உடற்பயிற்சி முறை. அதனை பயிற்சி செய்வோருக்கு பல நன்மைகள் கிடைக்கிறது என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Update: 2021-06-22 01:29 GMT
திருவனந்தபுரம்,

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானது, யோகா. மனித குலத்தின் நலம் பேணும் அற்புதமான இந்த கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.

சா்வதேச யோகா தினத்தையொட்டி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்  வெளியிட்ட வீடியோ செய்தியில்,

யோகாசனம் என்பது நமது நல்வாழ்வு சார்ந்த விஷயம். அதனை எந்த மதத்துடனும் தொடா்புபடுத்தி குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிடக் கூடாது. அப்படி செய்தால் பெரும்பான்மையான மக்களுக்கு யோகாசனத்தின் நன்மைகள் கிடைக்காமல் போய்விடும்.

தினசரி யோகாசனம் செய்வது உடல் மற்றும் மன நலனுக்கு ஏற்றது. இந்த பாரம்பரிய பயிற்சி முறையை மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ஓா் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும். 

யோகாசனம் என்பது அறிவியல்பூா்வமான உடற்பயிற்சி முறை. அதனை பயிற்சி செய்வோருக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

யோகாசனத்தின் மதசார்பின்மையை காக்கும் வகையில் கேரள யோகா அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பினர் மாநிலத்தில் இதுவரை 50,000-க்கும் மேற்பட்டோருக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்