டெல்லியில் பலரது டெங்கு மரணம் கணக்கில் கொள்ளவில்லையா? மத்திய மந்திரி அதிர்ச்சி தகவல்

டெல்லியில் டெங்குவுக்கு மரணம் அடைந்த ஏழைகள் பலர் கணக்கில் வரவில்லை என மத்திய மந்திரி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-11-01 08:36 GMT

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் பருவமழையை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  கடந்த அக்டோபர் 18ந்தேதி வரையில் மொத்தம் 723 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது.

முதன்முறையாக டெங்கு பாதிப்புக்கு கடந்த மாதம் 18ந்தேதி ஒருவர் பலியானார்.  இதனால், சுகாதார பணிகளை தீவிரப்படுத்த டெல்லியில் அரசு நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

டெல்லியில் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதனை முன்னிட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் உறவினர்கள் என பலரது வருகையால் சில வார்டுகள் நிரம்பி வழிகின்றன.

இதனையடுத்து நோயாளிகள், தரையில் இருந்தபடியும் மற்றும் வாசல் பகுதியில் இருந்தபடியும், சிகிச்சை பெற கூடிய சூழல் கடந்த காலங்களில் காணப்பட்டது.

டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் 531 பேருக்கு டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.  நடப்பு ஆண்டில் இதுவரை 6 பேர் டெங்குவுக்கு உயிரிழந்து உள்ளனர் என தெற்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், டெல்லி டெங்கு சூழல் பற்றி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார்.  இந்த கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே ஒருங்கிணைப்பு வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

டெல்லியில் ஏழைகள் பலருக்கு முறையாக சிகிச்சை வழங்கப்படவில்லை.  அவர்களது மரணமும் கணக்கில் கொள்ளப்படவில்லை.  அதனால், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்