அக்னிபத் திட்டம்; திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை- தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அஜித் தோவல் கூறினார்.

Update: 2022-06-21 09:15 GMT

புதுடெல்லி,

முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக நேற்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) பல்வேறு அமைப்புகள் சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தன. இதனால் வடமாநிலங்களில் ரெயில் சேவை கணிசமாக பாதிக்கப்பட்டது.

ஒருபக்கம் போராட்டம் நடைபெற்றாலும் இன்னொரு பக்கம் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அஜித் தோவல் மேலும் கூறுகையில், " அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறும் கேள்விக்கே இடமில்லை. நம்பிக்கையுடன் இருங்கள். தேசம் மீதும் நாட்டின் தலைமை மீதும் நம்பிக்கை கொண்டு இருங்கள். பிரதமர் மோடி போன்ற தலைமையால் மட்டுமே இத்தகைய மாற்றத்தை கொண்டு வர முடிந்துள்ளது. நாட்டு நலன் சார்ந்த விஷயம் என்றால் எந்த விலை கொடுத்தேனும் அதை செய்ய வேண்டும் என மோடி கூறுவார்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உரிய விசாரணைக்குப் பிறகு இந்த வன்முறைகளுக்கு யார் காரணம் என்று தெரியவரும்.

ஒட்டுமொத்த போரும் புதிய மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நேரடி தொடர்பு அற்ற போரை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் சண்டை செய்ய வேண்டியிருக்கும். தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. நாளைய மாற்றத்திற்கு நாம் தயராக இருக்க வேண்டும் என்றால் நாம் மாற வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்