முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவேன்; மந்திரி அசோக் எச்சரிக்கை

வருவாய் துறையில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவேன் என்று மந்திரி அசோக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-02-04 18:45 GMT

சிக்கமகளூரு:

வருவாய் துறையில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவேன் என்று மந்திரி அசோக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மந்திரி அசோக்

சிக்கமகளூருவுக்கு நேற்று மாநில வருவாய் துறை மந்திரி அசோக் வந்தார். அவர் அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் காபி குடித்துக் கொண்டே மனு வாங்கினேன். இதை சிலர் வேறு விதமாக பார்த்தனர். அவர்களது பார்வையின் அர்த்தம் தவறு. நான் காபி குடித்துக் கொண்டிருந்தாலும், எனது வேலையில் கவனமாக இருப்பேன். வருவாய் துறையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் விரைவில் சரி செய்யப்படும். யாராவது மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தால் அவர்களை சிறைக்கு அனுப்புவேன். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. நான் இங்கு அரசியல் குறித்து பேச வரவில்லை. நான் எனது பணிகளை செய்ய வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கலெக்டர் அலுவலகம்

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சிக்கமகளூரு அருகே உள்ள தொண்டர்மக்கி பகுதிக்கு சென்றார். அங்கு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட உள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதையடுத்து அவர் பணிகளையும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்திற்கு என புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. மாநிலத்தில் கிராம கணக்காளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளனர். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு ஆகும். மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் மூலம் கணக்குகளை சமர்ப்பிக்க அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் காகிதங்கள் செலவு குறையும்.

டிஜிட்டல் மயம்

நிலப்பட்டா மற்றும் பல்வேறு நில ஆவணங்களுக்காக இனி வருவாய் துறைக்கு அலையும் நிலை தேவையில்லை. இனி அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆக்கப்படும். அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆவதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை தங்களுடைய செல்போன்களிலேயே பெறலாம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக வருவாய் துறையில் உள்ள பழைய ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயம் ஆவது உறுதி. இதனால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

இதுதவிர அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நிலம், வீடு, சொத்துகள் போன்றவை ஆங்கிலேயர் காலத்தில் கணக்கெடுக்கப்பட்டது. ஆகையால் தற்போது விரைவில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து சொத்துகள் கணக்கெடுப்பு பணியை நடத்த இருக்கின்றன. இதற்காக மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து ரூ.280 கோடியை ஒதுக்கி உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துரையாடினார்

இதையடுத்து அவர் சிக்கமகளூரு டவுனில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சென்றார். அங்குள்ள தனியார் கல்லூரியில் காப்பித்தோட்ட உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். அதையடுத்து அவர் கடூர் தாலுகா இரேநல்லூர் கிராமத்திற்கு சென்றார். அங்கு நேற்று இரவு தங்கினார். இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலையில் அவர் கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரமேஷ், சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்