குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்காது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

விவசாயிகளின் விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு நியமித்த குழு, சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்காது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

Update: 2023-04-21 00:26 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தர்சிங் ஹூடா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மோடி அரசு, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், விவசாய இடுபொருட்களின் செலவுதான் இரட்டிப்பு ஆகியுள்ளது. டீசல் விலையும் அதிகரித்துள்ளது.

விவசாயிகளின் கடன் சுமையும் உயர்ந்துள்ளது. மோடி அரசு ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு, விவசாயிகளின் கடன் அளவு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது, ரூ.23 லட்சத்து 44 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது.

காங்கிரஸ் ஆட்சியின்போது, ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், மோடி அரசு, விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை. கார்ப்பரேட்களின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்தது. மறுபக்கம், விவசாயிகள், ஆழமான கடன்சுமையில் சிக்கிக்கொண்டனர். இதற்கு மோடி அரசின் கொள்கைகளே காரணம்.

சட்டபூர்வ உத்தரவாதம்

விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிப்பது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. ஆனால், அக்குழுவின் விசாரணை வரம்புகள் நீர்த்துப் போய்விட்டன.

அதனால், அந்த குழு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்காது. விவசாயிகளின் எதிர்பார்ப்பை அக்குழுவால் பூர்த்தி செய்ய இயலாது. விவசாய சங்கங்களும் இதே கருத்தை கொண்டுள்ளன.

இப்பிரச்சினையில் அரசின் நோக்கம் சந்தேகமாக உள்ளது. அரசுக்கு அக்கறை இருந்தால், முதலிலேயே சட்டபூர்வ உத்தரவாதம் அளித்திருக்கும்.

ரூ.40 ஆயிரம் கோடி லாபம்

மத்தியில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்கவும், அந்த விலைக்கு குறைவாக விற்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கவும் சட்டம் கொண்டுவரும்.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் கருவியாக மாறிவிட்டது. அத்திட்டத்தால், கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி லாபம் சம்பாதித்துள்ளன என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்