42 லட்சம் உயிரிழப்புகளை தடுத்த கொரோனா தடுப்பூசி; ஆய்வில் தகவல்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் 42 லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு உள்ளன என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

Update: 2022-06-24 15:08 GMT



புதுடெல்லி,



சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பெருந்தொற்றாக பரவி உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா முதல் அலை பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. அதன்பின்னர் 2021ம் ஆண்டில் 2வது அலை நாட்டையே புரட்டி போட்டது. எனினும், அந்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு இருந்தன. இதனால், உயிரிழப்புகள் பெரும் அளவில் தவிர்க்கப்பட்டு உள்ளன.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் இம்பீரியல் கல்லூரியின் தலைமை ஆராய்ச்சியாளர் ஆலிவர் வாட்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, நாட்டில் கொரோனா தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் 42 லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு உள்ளன என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

இதன்படி கொரோனா தடுப்பூசியானது இந்தியாவில் ஏற்பட இருந்த 27 முதல் 53 லட்சம் வரையிலான உயிரிழப்புகளை தடுத்து உள்ளது. சர்வதேச அளவில் 2 கோடி பேரின் உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பூசி தடுத்து உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

185 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி இல்லையென்றால், இந்த காலகட்டத்தில் 3.14 கோடி பேர் உயிரிழந்து இருக்க கூடும். உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சம அளவில் வினியோகம் செய்யப்பட்டு இருப்பின் இன்னும் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்