ஹேமாவதி ஆற்றில் தவறி விழுந்த டாக்டர் சாவு

ஒலேநரசிபுரா அருகே ஹேமாவதி ஆற்றில் பூஜை செய்ய சென்ற டாக்டர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2023-09-16 21:05 GMT

ஹாசன்:

ஒலேநரசிபுரா அருகே ஹேமாவதி ஆற்றில் பூஜை செய்ய சென்ற டாக்டர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பூஜை செய்ய சென்றவர்

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுரா தாலுகா கேரகோடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 31). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். ஆண்டிற்கு ஒரு முறை கோனாப்பூரில் உள்ள ஹேமாவதி ஆற்றில் சிறப்பு பூஜை செய்துவிட்டு வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் கோனாப்பூர் ஹேமாவதி ஆற்றில் பூஜை செய்வதற்காக சென்றிருந்தார்.

வழக்கம்போல அவர் ஆற்றில் இறங்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி நீரில் விழுந்தார். நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இதனால் அவரால் வெளியே வர முடியாமல் போனது. இந்தநிலையில் இரவு வெகுநேரமாகியும் மகன் வீட்டிற்கு திரும்பவில்லை என்று பதற்றம் அடைந்த பெற்றோர், இதுகுறித்து கோரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

ஆற்றில் மூழ்கி சாவு

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்திரசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்திரசேகரின் ஆடைகள் ஆற்றின் அருகே கிடந்தது. இதையடுத்து சந்திரசேகர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த போலீசார் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றில் அவரது உடல் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சந்திரசேகர் கால்தவறி ஆற்றில் விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரசேகரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கோரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்