இலவச உணவு அளிக்கும் திட்டம்: அரிசி, கோதுமை போதிய அளவு உள்ளது - மத்திய அரசு தகவல்
ஏழைகளுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டத்திற்காக அரிசி, கோதுமை போதிய அளவு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உணவு தானியங்கள் கையிருப்பு குறித்த ஆய்வின்படி அக்டோபர் 1-ந் தேதி நிலவரப்படி, 227 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் மத்திய அரசின் தொகுப்பில் கையிருப்பில் உள்ளதாக நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 113 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 237 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான கரீப் பருவ கொள்முதல் தொடங்கியுள்ளதால் அக்டோபர் 16-ஆம் தேதி வரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பருவமழை சிறப்பாக பெய்து வருவதால், இதே அளவிலான நெல் உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.