நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் 26 சதவீதம் உயர்வு: மத்திய அரசு தகவல்

நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 17-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் நேரடி வரி வசூல் 26 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Update: 2022-12-18 22:05 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 17-ந் தேதி (நேற்று முன்தினம்) வரையிலான நேரடி வரி வசூல் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதில் முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் வரி வசூல் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 17-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் வசூலான மொத்த நேரடி வரி ரூ.13,63,649 கோடி ஆகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.10,83,150 கோடி வசூலாகி இருந்தது.

இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் 25.90 சதவீதம் அதிகமான வரி வசூலாகி இருக்கிறது.

தனிநபர் வருமான வரி

ரூ.13,63,649 கோடி நேரடி வரி வருவாயில் மாநகராட்சி வரி ரூ.7,25,036 கோடி ஆகும். மேலும் பத்திர பரிவர்த்தனை வரி உள்ளிட்ட தனிநபர் வருமான வரி ரூ.6,35,920 கோடியும் அடங்கும்.

மேலும் மேற்படி காலகட்டத்தில் வசூலான மொத்த முன்கூட்டிய வரி வசூல் ரூ.5,21,302 கோடி ஆகும். முந்தைய ஆண்டில் இது ரூ.4,62,038 கோடியாக இருந்தது. இதன் மூலம் 12.83 சதவீத உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.

இதைப்போல நேற்று முன்தினம் வரையிலான நடப்பு நிதியாண்டு காலத்தில் வசூலான நிகர நேரடி வரி வசூலும் 19.81 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதாவது ரூ.11,35,754 கோடி வரி வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.9,47,959 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது..

குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

டிசம்பர் 17-ந் தேதி வரை முறையாக சரிபார்க்கப்பட்ட வருமான வரி தாக்கல்களில் சுமார் 96.5 சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் செயலாக்க வேகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இது நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட திருப்பி செலுத்தும் எண்ணிக்கையில் 109 சதவிகிதம் அதிகரிப்புடன் விரைவாக பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு வழிவகுத்தது.

நடப்பு நிதியாண்டில் 17.12.2022 வரை திரும்பப்பெறும் தொகையாக ரூ.2,27,896 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.1,35,191 கோடியை விட 68.57 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய அரசு கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்