குஜராத் தேர்தல்; ஓட்டு போடுவதற்காக திருமண நேரம் மாற்றம்... மணமகனின் அதீத ஆர்வம்

குஜராத் சட்டசபை தேர்தலில் ஓட்டு போடும் ஆர்வத்தில் மணமகன் ஒருவர் காலையில் நடைபெற இருந்த தனது திருமண நிகழ்வை மாலை நேரத்திற்கு மாற்றியுள்ளார்.

Update: 2022-12-01 10:36 GMT



வதோதரா,


குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதில், முதல்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரவுல்பாய் மோரே என்பவருக்கு இன்று காலை திருமணம் நடக்க இருந்தது. இதற்காக அவர், குஜராத்தில் இருந்து கிளம்பி மராட்டியம் புறப்பட்டு செல்ல வேண்டும்.

ஆனால், கடைசி நேரத்தில் தனது திருமண நிகழ்வை காலைக்கு பதிலாக மாலை நேரத்திற்கு மாற்றி விட்டு, ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக ஓட்டு மையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அவர், தபி நகரில் உள்ள வாக்கு சாவடியில் வரிசையில் சென்று நின்றார். திருமணத்திற்கான பாரம்பரிய உடையான குர்தா மற்றும் பைஜாமா அணிந்து, ஆடையில் மஞ்சள் பூசிய நிலையில் அவர் காணப்பட்டார்.

இதன்பின், ஓட்டு போட்ட திருப்தியுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ஒவ்வொருவரும் ஓட்டு போட வேண்டும். ஓட்டை வீணாக்க கூடாது. எனது திருமணம் காலையில் நடைபெற இருந்தது.

ஆனால், நான் அதனை மாலை நேரத்திற்கு மாற்றியமைத்தேன். மராட்டியத்தில் நடைபெற உள்ள எனது திருமணத்திற்கு செல்ல வேண்டும். அதற்காக புறப்பட்டு கொண்டிருக்கிறேன் என கூறி விட்டு சென்றார்.

குஜராத்தில் ஓட்டு போடுவதில் உள்ள ஆர்வத்தில் மணமகன் ஒருவர், திருமண நிகழ்வை காலையில் இருந்து, மாலை நேரத்திற்கு தள்ளி வைத்தது அந்த பகுதி மக்களிடையே ஜனநாயக கடமையாற்றும் எண்ணத்திற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்