மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நேற்று மிரட்டல் வந்திருக்கிறது.

Update: 2024-05-22 19:01 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாட்டில் தற்போது இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த ஒரு மாதத்தில் டெல்லி, ஜெய்ப்பூர், ஆமதாபாத், லக்னோ, கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், விமான நிலையங்களுக்கு இ-மெயிலில் பல்வேறு மிரட்டல்கள் வந்துள்ளன. இதில் டெல்லி பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மிரட்டல் வந்திருக்கிறது.

இந்த மிரட்டல் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரின் இ-மெயிலுக்கு வந்துள்ளது. அவர் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மோப்பநாய், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் குழுவினர் மற்றும் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் குழுவினருடன் போலீசார் அங்கு விரைந்தனர். தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. உள்துறை அமைச்சகத்தின் அனைத்து இடங்களும் சல்லடை போட்டு தேடுவது போல தேடப்பட்டன. ஆனால் சந்தேகத்துக்கு இடமாக எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதனால் இந்த மிரட்டலும் புரளியானது. மிரட்டல் வந்த இ-மெயில் முகவரியை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்