வாகனங்கள் திருட்டு குறித்து ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்யும் புதிய திட்டம்

கர்நாடகத்தில் வாகனங்கள் திருட்டு தொடர்பாக ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்யும் திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார்.

Update: 2023-09-15 21:21 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் வாகனங்கள் திருட்டு தொடர்பாக ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்யும் திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார்.

சித்தராமையா ஆலோசனை

பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர், மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், தீயணைப்பு துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன், பெங்களூரு சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் (மேற்கு) சதீஸ்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக போலீஸ் துறைக்காக 3 புதிய திட்டங்களை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார்.

இ-வழக்குப்பதிவு திட்டம்

அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வாகனங்கள் திருட்டுப்போனால், அதுபற்றி ஆன்லைன் மூலமாக புகார் அளித்து இ-வழக்குப்பதிவு செய்யும் திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி வாகனங்கள் திருட்டுப்போனால் ஆன்லைன் மூலமாகவே புகார் அளித்து, அதற்கான எப்.ஐ.ஆர். (வழக்குப்பதிவு) ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலமாகவே தங்களது வாகனங்கள் பற்றிய தகவல்கள், வாகனத்தின் புகைப்படம் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் தெரிவிக்க வேண்டும்.

பெங்களூருவுக்கு 700 கருவிகள்

இதுதவிர மாநிலம் முழுவதும் உள்ள சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையங்களுக்கு தேவையான இ-ரசீது (செலான்) வழங்கும் கருவிகள் வழங்கப்பட்டது. பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசாருக்கு மட்டும் 700 இ-ரசீது வழங்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

தடயவியல் ஆய்வக அறிக்கைகளை விரைந்து பெறுவதற்கான திட்டத்தையும் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

அபராத தொகை

கர்நாடகத்தில் வாகன திருட்டு குறித்து ஆன்லைன் மூலமாக புகார் அளித்து இ-எப்.ஐ.ஆர் பெற்றுக் கொள்ளும் திட்டம் மூலமாக, வழக்குப்பதிவு செய்ய தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு போலீசார் விசாரணையை வேகமாக தொடங்க முடியும்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக விதிக்கப்படும் அபராத தொகை வசூலிப்பதற்காக வழங்கப்படும் இ-ரசீது திட்டத்துடன், அரசு கஜானாவை இணைத்திருப்பது நாட்டிலேயே கர்நாடகம் தான் முதல் மாநிலம் ஆகும். குற்ற வழக்கில் தடயவியல் ஆய்வறிக்கை முக்கியமானதாகும். தடயவியல் ஆய்வகத்திற்கு தேவையான நவீன வசதிகள் செய்து கொடுத்திருப்பதன் மூலம் போலீஸ் துறை இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்