பா.ஜ.க.வின் 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் கடன் ரூ.155 லட்சம் கோடியாக அதிகரிப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

பா.ஜ.க.வின் 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் கடன் 3 மடங்காகி ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

Update: 2023-06-10 18:56 GMT

காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளதாக பா.ஜ.க. கூறுகிறது. இந்த சாதனைகளைப் பொதுமக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அந்தக் கட்சி ஒரு மாத கால பிரசார இயக்கம் நடத்தி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி நேர்மாறான ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன் வைக்கிறது. 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் கடன் 3 மடங்கு பெருகி, ரூ.155 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது என அந்தக் கட்சி கூறுகிறது.

தவறான பொருளாதார நிர்வாகம்

இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணம், மோடி அரசின் 9 ஆண்டுகால தவறான பொருளாதார நிர்வாகம்தான். 2014-ம் ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றது தொடங்கி நாட்டின் கடன்களில் இதுவரையில் ரூ.100 லட்சம் கோடியைச் சேர்த்து வைத்துள்ளது. குஜராத் முதல்-மந்திரியாக மோடி இருந்தபோது அரசியல் அரங்கின் மறுமுனையில் இருந்தவர்களை, ஆற்றல் இல்லாதவர்கள், திறமையற்றவர்கள், ஊழல்வாதிகள் என்றெல்லாம் குற்றம் சாட்டினார். அந்த வார்த்தைகள் இன்றைக்கு வேறு எவரையும் விட அவருக்கும் அவரது அரசுக்கும் பொருந்தும்.

அன்றும் இன்றும் கடன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அழித்த பின்னர், மிகப்பெரிய அளவில் வேலையில்லா திண்டாட்டத்தையும், விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வையும் மோடி அரசு உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் கடனில் ரூ.100 லட்சம் கோடியை மோடி அரசு சேர்த்திருப்பது நினைத்துப் பார்க்க முடியாதது. இந்தியாவின் கடன் 2014-ம் ஆண்டு ரூ.55 லட்சம் கோடிதான். தற்போது அது ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 67 ஆண்டுகளில், 14 பிரதமர்களின் கீழ் நாடு இருந்தபோது, அதன் கடன் ரூ.55 லட்சம் கோடிதான். ஆனால் மோடி அரசின்கீழ் மட்டுமே ரூ.100 லட்சம் கோடி கடன் கூடுதலாக சேர்ந்துள்ளது.

'வெள்ளை அறிக்கை வேண்டும்'

பொருளாதார நிர்வாகம் என்பது பத்திரிகைகளில் தலைப்புச்செய்தி வர வைப்பது போன்றதல்ல. டெலிபிராம்ப்டர் கருவிகள் வாயிலாகவோ அல்லது நிச்சயமாக வாட்ஸ் அப் வாயிலாகவோ பொருளாதாரத்தை நிர்வகித்து விட முடியாது. பொருளாதார பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்வதால், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மோடி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்