இன்னும் 2-3 ஆண்டுகளில் நக்சலைட்டு பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் - அமித்ஷா உறுதி

நக்சலைட்டுகள் நாடு முழுவதும் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2024-05-26 22:22 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

சத்தீஷ்காரில் மட்டுமே நக்சலைட்டுகள் இயங்கி வருகிறார்கள். இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் நக்சலைட்டு பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் என்று அமித்ஷா கூறினார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், "நக்சலைட்டுகள் நாடு முழுவதும் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டனர். பசுபதிநாத் முதல் திருப்பதி வரையிலான பாதையை 'நக்சல் வழித்தடம்' என்று சொல்லி வந்தனர். அந்த நக்சல் வழித்தடத்திலும் நக்சலைட்டுகள் யாரும் இல்லை.

ஜார்கண்ட் மாநிலம், நக்சலைட்டுகளிடம் இருந்து விடுபட்டு விட்டது. பீகார் மாநிலமும் முற்றிலும் மீண்டு விட்டது. ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களும் நக்சலைட்டு பிரச்சினையில் இருந்து விடுபட்டு விட்டன. சத்தீஷ்கார் மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டும் நக்சலைட்டுகள் இன்னும் இயங்கி வருகிறார்கள். அங்கு கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்ததால், நக்சலைட்டுகளை ஒழிக்க முடியவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் அங்கு பா.ஜனதா அரசு அமைந்தது. அதைத்தொடர்ந்து, சத்தீஷ்காரை நக்சலைட்டுகளிடம் இருந்து விடுவிப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

அங்கு பா.ஜனதா அரசு அமைந்த பிறகு 125 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். 352 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 175 பேர் சரண் அடைந்துள்ளனர். இவையெல்லாம் கடந்த 5 மாதங்களில் நடந்தவை. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் நக்சலைட்டு பிரச்சினையில் இருந்து நாடு முற்றிலும் விடுபட்டு விடும் என்று உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்