ஒடிசாவில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 137 தமிழக பயணிகள் வருகை

சென்னை வந்த பயணிகளிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் நலம் விசாரித்தனர்.

Update: 2023-06-03 19:10 GMT

அதிகாலை 4.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் சிறப்பு ரெயில் நடைமேடை 11 க்கு வந்தடைந்தது.

Live Updates
2023-06-04 00:29 GMT

ஒடிசா ரெயில் விபத்தில் பலியானோருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் நடந்த ரெயில் விபத்து பற்றிய சோகமான செய்தியால் ஜில் மற்றும் நானும் மனம் உடைந்தோம். இந்த கொடூரமான சம்பவத்தில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும், காயமடைந்த பலருக்கும் எங்கள் பிரார்த்தனைகள். அமெரிக்காவும் இந்தியாவும் எங்கள் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் குடும்பம் மற்றும் கலாச்சாரத்தின் உறவுகளில் வேரூன்றிய ஆழமான பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன - மேலும் அமெரிக்கா முழுவதும் உள்ள மக்கள் இந்திய மக்களுக்காக துக்கப்படுகிறார்கள். மீட்புப் பணிகள் தொடரும்போது, இந்திய மக்களை நம் சிந்தனையில் வைத்திருப்போம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

2023-06-03 23:51 GMT

தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், “ஒடிசாவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் வந்தவர்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்து 8 பேர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

யாருக்கும் தீவிர சிகிச்ச்சைகான பெரிய பாதிப்புகள் இல்லை. 305 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். 205 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை” என்று அவர் கூறினார்.

2023-06-03 23:16 GMT

சிறப்பு ரெயிலில் வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றனர்.

 

சென்னை,

கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்கள் மூலம் ரெயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிகாலை 4.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் சிறப்பு ரெயில் நடைமேடை 11 க்கு வந்தடைந்தது.

சிறப்பு ரெயிலில் வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றனர்.

முன்னதாக ரெயிலில் வந்த பயணிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.

பயணிகளை அவரவர் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல 50 பாஸ்ட் டிராக் வாகனங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. ரெயிலில் வரும் தாய் மற்றும் சேய்களுக்கு தயாராக இருக்கும் 5 தாய், சேய் ஊர்திகள் வந்திருந்தன.

காயமடைந்த பயணிகளை ஒமந்தூரார், ஸ்டான்லி மற்றும் ராஜிவ்காந்தி மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்ல அறிவுத்தப்பட்டிருந்தனர்.

காயமடைந்த பயணிகள் B2 மற்றும் B3 - A/C பெட்டிகளில் வந்தனர். அதில் பலருக்கு காலில் காயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சென்னை ரெயில் நிலையத்திற்கு வெளியே போலீசார், டிடிஆர்எப் மற்றும் கமாண்டோக்கள் காத்திருந்தனர். மேலும் ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நின்றன.  

2023-06-03 23:05 GMT

ஒடிசாவில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரெயில்: பயணிகளை வரவேற்க அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் வருகை தந்துள்ளனர். 

2023-06-03 22:52 GMT

ஒடிசாவில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரெயில்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேரில் ஆய்வு

முன்னதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பல சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய 6 குழுக்கள் இங்கு உள்ளன... 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஒடிசா விபத்தில் சிக்கிய 293 பேர் சிறப்பு ரெயிலில் வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

2023-06-03 22:36 GMT

ஒடிசாவில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரெயில்: பயணிகளை வரவேற்க தயார் நிலை 

சென்னை,

கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் மூலம் ரெயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறப்பு ரெயிலில் வரும் பயணிகளை வரவேற்க சென்னை ரெயில் நிலையத்திற்கு வெளியே போலீசார், டிடிஆர்எப் மற்றும் கமாண்டோக்கள் காத்திருக்கின்றனர். மேலும் ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றன.

2023-06-03 22:12 GMT

சென்னை கோரமண்டல் உள்பட 3 ரெயில்கள் மோதலில் பலி எண்ணிக்கை 288 ஆக உயர்வு

பாலசோர்,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.

அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த இந்த திடீர் விபத்தால், ரெயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி உருக்குலைந்தன. ஒன்றின் மீது மற்றொன்று ஏறி நின்றன, ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி சிதைத்தன.

தடம்புரண்ட 10-க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் நொறுங்கி விட்டன.

288 பேர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கிய 3 ரெயில்களில் 2 ரெயில்கள் பயணிகள் ரெயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கினார்கள். இதில் பலர் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

இதுவரை மொத்தம் 288 பயணிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நாட்டில் இதுவரை நிகழ்ந்துள்ள மிகப்பெரிய ரெயில் விபத்துகளில் ஒன்றாக இந்த விபத்தும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது.

மீட்புப்பணி

நேற்று முன்தினம் இரவு விபத்து நடந்த சில நிமிடங்களில் மீட்பு பணிகளும் தொடங்கப்பட்டன.

உள்ளூர் மக்கள் தொண்டுள்ளத்துடன் தொடங்கிய இந்த மீட்பு பணிகளில் மாநில போலீசார், தீயணைப்பு படையினர், மாநில-தேசிய பேரிடர் மீட்புப்படை என பெரும் படையே இணைந்து பம்பரமாக சுழன்று மீட்பு பணிகளை மேற்கொண்டது.

சுமார் 200 ஆம்புலன்ஸ்கள், 50 பஸ்கள், 45 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 1,200-க்கு மேற்பட்ட மீட்புக்குழுவினர் என பெரிய குழுவினரே அசுர வேகத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த மிகப்பெரிய மீட்புப்பணிகளில் விமானப்படையும் உதவிக்கரம் நீட்டியது. படுகாயமடைந்த பயணிகளை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்களை வழங்கி இருந்தது.

ராட்சத கிரேன்கள்

ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளை கியாஸ் கட்டர்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்களுடன் வெட்டி, அதில் சிக்கிய பயணிகளை மீட்புக்குழுவினர் மீட்டனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு போர்க்கால அடிப்படையில் நடந்த இந்த மீட்புப்பணிகள் நேற்று மாலையில் முடிவடைந்தன. அதைத்தொடர்ந்து விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்தன.

இதற்காக ராட்சத கிரேன்கள் மற்றும் புல்டோசர்கள் என ஏராளமான எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சீரமைப்பு பணிகள் நேற்று இரவிலும் நீடித்தன.

விபத்து நடந்த பகுதியில் தண்டவாளங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எனவே அவற்றை சீரமைத்து அந்த வழியாக ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தூக்கி எறியப்பட்டோம்

விபத்துக்குள்ளான பெட்டிகள் நொறுங்கி கிடப்பதையும், அவற்றில் இருந்து பயணிகள் மீட்கப்படுவதையும் டிரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டு நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் இருந்தன.

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த பிஜூஷ் போட்டர், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்தார். அவர் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘விபத்து நிகழ்ந்தபோது மிகப்பெரிய சத்தம் கேட்டது. இதைக்கேட்டு நாங்கள் திடுக்கிட்டோம். நாங்கள் இருந்த ரெயில் பெட்டி திடீரென ஒரு பக்கம் திரும்புவதைப் பார்த்தோம். ரெயிலின் வேகத்தால் எங்களில் பலர் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டோம். நாங்கள் தவழ்ந்து வெளியே வந்தபோது, சுற்றிலும் உடல்கள் கிடப்பதைக் கண்டோம்’ என அதிர்ச்சி மாறாமல் கூறினார்.

பிரதமர் மோடி நேரில் ஆய்வு

இந்த நிலையில் ரெயில் விபத்து நடந்த பகுதிக்கு பிரதமர் மோடி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அரை மணி நேரத்துக்கு மேல் அங்கு இருந்த மோடி, விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள பாலசோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

முன்னதாக இந்த விபத்து தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உயர்மட்டக்குழு கூட்டம் ஒன்றை பிரதமர் மோடி நடத்தினார். இதில் உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மொழி தெரியாமல் அவதி

இதற்கிடையே விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் பாலசோர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலத்தவர் என்பதால் மொழி தெரியாமல் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பயணிகளுக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்படும் என்பதால், ரத்த தானம் செய்வதற்காக போலீசாரும், உள்ளூர் மக்களும் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். பயணிகளுக்கு உதவுவதற்காகவும், ரத்த தானத்துக்காகவும் பாலசோர் மருத்துவக்கல்லூரியில் மட்டுமே 2 ஆயிரத்துக்கு மேற்பட்டார் வரிசையில் நிற்பதை பார்க்கும்போது மனிதாபிமானத்தின் உச்சம் தெரிந்தது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆஸ்பத்திரியின் பிணக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பெரும்பாலான உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்மட்ட விசாரணை

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடியும் அறிவித்து உள்ளார்.

உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடங்கி உள்ளனர்.

2023-06-03 21:26 GMT

புவனேஸ்வருக்கு விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

ஒடிசா ரெயில் விபத்தை தொடர்ந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் நகருக்கும், அங்கிருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று விமான போக்குவரத்து நிறுவனங்களை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களும் கண்காணித்து, தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். புவனேஸ்வர் போல ஒடிசா மாநிலத்தின் பிற விமான நிலையங்களுக்கும் விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம். அதேபோல, ரெயில் விபத்தை தொடர்ந்து விமான டிக்கெட் ரத்து அல்லது பயண தேதியை மாற்றி அமைத்ததற்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

2023-06-03 19:39 GMT

 ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் எதிரொலியாக 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “

நாளை ஹவுராவில் இருந்து பெங்களூரு செல்லும் விஸ்வேஸ்ரயா விரைவு ரெயில் (12863) ரத்து செய்யப்படுகிறது.

நாளை ஹவுராவில் இருந்து சென்னை வரும் சென்னை சென் ட்ரல் மெயில் ரெயில் (12839) ரத்து செய்யப்படுகிறது.

நளை திப்ரூகார்க் - கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரெயில் (22504) சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்