ஜம்மு-காஷ்மீரில் பயணிகளை ஏற்றி சென்ற வாகனம் விபத்து: 8 பேர் பலி
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.;
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள போனியாரிலிருந்து லகாமா புஜிதாலா கிராமத்திற்கு 14 பயணிகளுடன் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த கோர விபத்தில் வாகனத்தில் இருந்த 2 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த 6 பயணிகளில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவர்கள் பாரமுல்லாவில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.