அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.

Update: 2023-05-16 02:03 GMT

Image Courtacy: PTI

புதுடெல்லி,

மத்திய அரசு பணிகளுக்கு 10 லட்சம் பேரை தேர்வு செய்வதற்காக, 'ரோஜ்கார் மேளா' என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கினார். ஒப்புதல் அளிக்கப்பட்ட காலியிடங்களை நிரப்ப போர்க்கால வேகத்தில் ஆட்களை தேர்வு செய்யுமாறு அரசுத்துறைகளை கேட்டுக்கொண்டார்.

இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கி உள்ளார்.

45 இடங்களில் நிகழ்ச்சி

இந்நிலையில், அரசு பணிகளுக்கு மேலும் 71 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இதற்காக, நாடு முழுவதும் 45 இடங்களில் 'ரோஜ்கார் மேளா' நடக்கிறது. அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன கடிதங்களை வழங்குகிறார்.

அத்துடன், அரசு பணியில் எப்படி செயலாற்ற வேண்டும் என்று அவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

என்னென்ன பணி?

அவர்கள் அஞ்சல்துறை ஆய்வாளர், டிக்கெட் கிளார்க், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர், தண்டவாள பராமரிப்பாளர், உதவி செக்ஷன் அதிகாரி உள்ளிட்ட பணிகளில் சேருவார்கள். அவர்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்பார்கள்.

இத்துடன், நியமன கடிதங்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரமாக உயரும்.

Tags:    

மேலும் செய்திகள்