தீய பழக்கங்களில் இருந்து விலக்கி வைப்பேன் என தாத்தா உத்தரவாதம்: விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு கோர்ட்டு ஜாமீன்

சிறுவன் ஓட்டிய கார் மோதி ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-05-22 09:08 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை கொண்டாட கடந்த 18ம் தேதி இரவு நண்பர்களுடன் தனது தந்தையின் சொகுசு காரில் கல்யாணி நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு வேதாந்த் உள்பட அனைவரும் மதுகுடித்துள்ளனர்.

பார்ட்டி முடிந்தபின்னர் 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் வேதாந்த் சொகுசு காரில் வீடு திரும்பியுள்ளார். சொகுசு காரில் 200 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக சென்றுள்ளார்.

கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் அதிவேகமாக சென்ற கார் முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த ஐ.டி. ஊழியர்களான அனுஷ் மற்றும் அவரது தோழி அஸ்வினி கோஷ்டா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு மற்றொரு காரில் விழுந்தனர். இந்த சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேதாந்த் அகர்வால் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினான்.

விபத்தை ஏற்படுத்திய கார் தடுப்பு சுவரில் மோதி நின்ற நிலையில் அதை சுற்றிவளைத்த அக்கம்பக்கத்தினர் காரை ஓட்டிய சிறுவன் வேதாந்த் அகர்வாலை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவரை மறுநாள் காலை சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, சிறுவனுக்கு பல்வேறு நிபந்தனைகளை கோர்ட்டு விதித்துள்ளது. அதில், சிறுவன் வேதாந்த் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்று போக்குவரத்து விதிகளை படிக்க வேண்டும். சாலை விபத்து குறித்து 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும். யரவாடா பகுதியில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து 15 நாட்கள் வேலை செய்ய வேண்டும். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட மனநல மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும் என நிபந்தனை விதித்து 15 மணிநேரத்தில் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பான கோர்ட்டு உத்தரவின் கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தீய பழக்கங்களில் இருந்து விலக்கி வைப்பேன் என சிறுவனின் தாத்தா கோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளார். அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீன் வழக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பேரனை தீய பழக்கங்களில் இருந்து விலக்கி வைத்து அவரை படிப்பில் கவனம் செலுத்த வைப்பேன், விடுமுறை தினங்களில் அவரது வாழ்க்கைக்கு தேவையான படிப்புகளை படிக்க வைப்பேன் என சிறுவனின் தாத்தா உத்தரவாதம் அளித்துள்ளார். மேலும், பேரன் கோர்ட்டு விதிக்கும் நிபத்தனைகளை பின்பற்றுவதை உறுதி செய்வேன் என தாத்தா உத்தரவாதம் அளித்ததின் அடிப்படையில் 7 ஆயிரத்து 500 ரூபாய் பிணைத்தொகையுடன் சிறுவனுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து புனே போலீசார் கீழமை கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்