தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகம் உள்பட பெங்களூருவில் 15 இடங்களில் வருமான வரி சோதனை

தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகம் உள்பட பெங்களூருவில் 15 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.16 கோடி மதிப்பிலான நகை, பணம், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில், ரூ. 2,500 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-04 21:42 GMT

பெங்களூரு:

தொழில் அதிபர்களின் வீடு, அலுவலகம் உள்பட பெங்களூருவில் 15 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.16 கோடி மதிப்பிலான நகை, பணம், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில், ரூ. 2,500 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு புகார்

பெங்களூருவில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த வரி வசூலில் பெங்களூருவின் பங்கு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர்கள், ஐ.டி. நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதையடுத்து கடந்த 27-ந் தேதி பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக நேற்று அதிகாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் இருந்து வந்த அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சென்று பெங்களூருவை சேர்ந்த டாக்டர், தொழில் அதிபர், நகை வியாபாரி உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

மேலும் மருந்தகம், தனியார் ஆஸ்பத்திரிகள், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வரும் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. விஜயநகர், பி.டி.எம். லே-அவுட், உளிமாவு, சதாசிவநகர், சாங்கி-டாங்கி, சாந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் தொழில் அதிபர், டாக்டர் ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் நாள் முழுவதும் சோதனை நடத்தினர்.

நகைக்கடையிலும்...

விஜயநகர், பிரகாஷ்நகரை சேர்ந்த டாக்டர்கள், மவுரியா சர்க்கிள் பகுதியை சேர்ந்த கஜாரியா நகை வியாபாரியின் வீடு மற்றும் நகைக்கடை, சாந்திநகரை சேர்ந்த நவீன் என்ற தொழில் அதிபர் ஆகியோரின் வீடுகளில் 3 கார்களில் வந்த 15 அதிகாரிகள் தீவரமாக சோதனை நடத்தினர். சோதனையை முன்னிட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள நகைக்கடையிலும் அவர்கள் சோதனை நடத்தினர். சோதனையின்போது வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டாக்டரின் மருந்தகம்

மேலும் பலரது வீடுகளில் இருந்து நகை, பணம், அசையா சொத்துக்ளுக்கான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விஜயநகரில் ஆஸ்பத்திரி மற்றும் மருந்தகம் நடத்தி வரும் டாக்டரான சந்தியா பட்டீல் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அரசுக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

நகை, பணம் சிக்கியது

இந்த சோதனை குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பெங்களூருவில் தொழில் அதிபர்கள், டாக்டர், நகைக்கடை உரிமையாளர் வீடு, அலுவலகம் உள்பட 15 இடங்களில் வருமானவரி ேசாதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது ரூ.2,500 கோடி அளவுக்கு அவர்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதியாகி உள்ளது. சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.7 கோடி ரொக்கம், ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.7 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளன. வரி ஏய்ப்பு செய்த பணத்தை கொண்டு சட்டவிரோதமாக சொத்துக்களை அவர்கள் வாங்கி குவித்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்