பெங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழை

பெங்களூரு, தட்சிண கன்னடாவில் கனமழை பெய்தது. இதில் தட்சிண கன்னடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்து ௨ சிறுமிகள் பலியானார்கள்.

Update: 2022-08-01 21:21 GMT

பெங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை கொட்டியது. இதனால் கடபா சுப்பிரமணியா பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று இரவும் கனமழை கொட்டியதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடபா மற்றும் சுப்பிரமணியாவுக்கு உட்பட்ட 4 கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது. இடுப்பு அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. வீடுகளுக்கு உள்ளும் வெள்ளம் புகுந்தது. சுப்பிரமணியாவுக்கு கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


மேலும் சுப்பிரமணியா அருகே பர்வதமுகி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்சரிந்து ஒரு வீடு முழுமையாக மண்ணுக்குள் புதைந்தது. இதில் ஒரு தம்பதியின் மகள்களான சுருதி(வயது 11), ஞானஸ்ரீ(6) ஆகியோர் பரிதாபமாக மண்ணில் புதைந்து இறந்தனர். இதேபோல் பெங்களூருவில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. 

Tags:    

மேலும் செய்திகள்