குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்களை நீக்குங்கள்: எக்ஸ், யூடியூப், டெலிகிராம் தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள், வீடியோக்களை நீக்கும்படி கூறி எக்ஸ், யூடியூப், டெலிகிராம் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2023-10-06 22:15 GMT

புதுடெல்லி, 

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எக்ஸ், யூடியூப், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு, இந்திய இணையத்தில் அவற்றின் தளங்களில் இருந்து குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள், வீடியோக்களை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவை போன்றவற்றை முறையாகவும், நிரந்தரமாகவும் நீக்க வேண்டும். அந்த தளங்களில் யாரும் அந்த படங்களை பார்ப்பதற்கான வழியை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்திலும் குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தல் படங்கள் பரப்பப்படுவதை தடுக்கும்வகையில் அதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப ராஜாங்க மந்திரி ராஜீவ் சந்திரசேகர், 'சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள் இல்லாத நிலையை உறுதிப்படுவதற்காக எக்ஸ், யூடியூப், டெலிகிராம் தளங்களுக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி பாதுகாப்பான, நம்பிக்கைக்குரிய இணையத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

எங்கள் நோட்டீசின்படி குறிப்பிட்ட சமூக வலைதளங்கள் துரிதமாக நடவடிக்கை எடுக்கவிட்டால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவு திரும்பப் பெறப்படும். இந்திய சட்டத்தின்படி அந்த சமூக வலைதளங்கள் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்