விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி தங்கம் சிக்கியது

மலேசியா, பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி மதிப்பிலான தங்கம் சிக்கி உள்ளது.

Update: 2023-08-12 21:24 GMT

பெங்களூரு:-

போதைப்பொருட்கள்

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தி பலரும் தங்கம், போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பாங்காக்கில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ரூ.1½ கோடி தங்கம்

அப்போது அவர் ராய்ச்சூரை சேர்ந்தவர் என்பதும், அவர் பாங்காக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, திரும்பி வரும்போது தங்கத்தை கடத்தியதும் தெரிந்தது. அவரிடம் இருந்து 619 கிராம் தங்கச்சங்கிலியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் மலேசியாவில் இருந்து வந்த விமான பயணிகளையும் அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.

அப்போது அதில் ஒரு ஆண் மற்றும் பெண் பயணியை தனியாக அழைத்து சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் தங்கச்சங்கிலி இருந்தது தெரிந்தது. 1¼ கிலோ எடை கொண்ட இந்த தங்கச்சங்கிலியை அவர்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கடத்தல் நகைகளை பறிமுதல் செய்தனர். ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்