19-வது மாடியில் இருந்து குதித்து சேலம் வாலிபர் தற்கொலை - பெங்களூருவில் பரபரப்பு

சேலம் வாலிபர் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-09 02:36 GMT

பெங்களூரு,

கர்நாடகம் மாநிலம் பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸ் ரோட்டில் ஒரு நட்சத்திர ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் கடந்த 6-ந் தேதி சரண் (வயது 28) என்ற வாலிபர், அறை எடுத்து தங்கினார். அவர் தொழில் விஷயமாக தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருப்பதாக ஓட்டலின் வரவேற்பாளரிடம் கூறி அறையை முன்பதிவு செய்திருந்தார். 2 நாட்களுக்கு அவர் அறை முன்பதிவு செய்திருந்தார்.

நேற்று காலையில் ஓட்டல் அறையை காலி செய்வதாக சரண் கூறினார். சிறிது நேரத்தில் மேலும் 2 நாட்கள் அறை முன்பதிவு செய்வதாக ஊழியர்களிடம் சரண் தெரிவித்தார். அதன்படி, நேற்று காலையில் அவர் ஓட்டலில் தனது அறையிலேயே இருந்தார். நேற்று மதியம் 2 மணியளவில் ஓட்டலின் 19-வது மாடியில் உள்ள பால்கனிக்கு சரண் சென்றுள்ளார்.

19-வது மாடியில் இருந்து திடீரென்று சரண் கீழே குதித்தார். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் ஐகிரவுண்டு போலீசார் விரைந்து வந்து சரணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் தங்கி இருந்த அறையிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

சரண் என்ன காரணத்திற்காக 19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. தற்கொலைக்கு முன்பாக 19-வது மாடியில் நின்று சரண் சிந்தித்து கொண்டு இருப்பதை ஊழியர்கள் சிலர் பார்த்துள்ளனர். அதன்பிறகு தான் அவர் கீழே குதித்திருப்பதாக ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஐகிரவுண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், சரணின் சொந்த ஊர் தமிழ்நாடு சேலம் ஆகும். கடந்த 6-ந் தேதியே பெங்களூருவுக்கு வந்து அவர் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சரண் தற்கொலை குறித்து சேலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம், என்றார்.

இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் வாலிபர் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்