அசாமில் அதிர்ச்சி; சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன

அசாமில் சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளாகி இருக்கின்றன.

Update: 2023-06-07 17:05 GMT

கவுகாத்தி,

மேற்கு வங்காளத்தின் அசன்சோல் பகுதியில் இருந்து அசாமின் காம்ரூப் பெருநகர மாவட்டத்தில் உள்ள திதெலியா நகருக்கு நிலக்கரி ஏற்றி கொண்டு சரக்கு ரெயில் ஒன்று சென்று உள்ளது.

அந்த ரெயில், போகோ நகர் அருகே சிங்ரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது. இதில், அந்த ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன.

இதனால், ராங்கியா-லும்திங் பிரிவில் 4 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த பகுதியில் சரக்கு ரெயில்களே அதிகம் செல்லும். அதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.

மொத்தம் 60 பெட்டிகள் கொண்ட அந்த சரக்கு ரெயிலின் மத்திய பகுதியில் இருந்த பெட்டிகளே தடம் புரண்டு உள்ளன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீண்டும் ரெயில்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒடிசாவின் ஜஜ்பூர் கியோஞ்சர் சாலையருகே பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, என்ஜின் இல்லாத சரக்கு ரெயிலின் பெட்டிகள், இடி இடித்ததில் உருண்டுள்ளன. இதில், சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கடந்த 2-ந்தேதி 3 ரெயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி தடம் புரண்ட சம்பவத்தில் 275 பயணிகள் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுபோன்று, சமீப நாட்களாக ரெயில்கள் அதிகம் தடம் புரள்வதும், விபத்தில் சிக்குவதும் அதிகரித்து காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்