தடை விதிக்கப்பட்ட மலை உச்சிக்கு சென்ற வாலிபர்கள்: திடீரென சூழ்ந்த பனி மூட்டம் - அடுத்து நிகழ்ந்த சம்பவம்..?

திடீரென சூழ்ந்த பனி மூட்டம் காரணமாக, மலை உச்சிக்கு சென்ற வாலிபர்கள் திரும்பி வர வழி தெரியாமல் தவித்தனர்.

Update: 2024-05-22 22:49 GMT

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே கண்ணமலை பகுதியை சேர்ந்தவர் அஷ்கர்(வயது 19). இவரது நண்பர்கள் சல்மான் (19), சைஹானுதீன் (19), மகேஷ்(19). இவர்கள் நேற்று முன்தினம் கண்ணமலை வனப்பகுதியில் மலை உச்சியில் உள்ள காட்சி முனைக்கு சென்றதாக தெரிகிறது.

அங்கு மழை பெய்து வருவதால், மலையேற தடை விதித்து வனத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் அதை மீறி சென்றனர். அங்கு மலை உச்சியை அடைந்த போது, திடீரென கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் அஷ்கர் உள்பட 4 பேரும் திரும்பி வர வழி தெரியாமல் மலையில் சிக்கி கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மேலும் தாங்கள் இருக்கும் இடத்தின் 'கூகுள் மேப்'பை (வரைபடம்) போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த அகழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனீஷ்குமார் தலைமையிலான போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் அடங்கிய மீட்பு குழு மலை உச்சியை நோக்கி புறப்பட்டது. அவர்களுடன் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் இரவு 9 மணியளவில் மலை உச்சியை சென்றடைந்து, 4 பேரையும் மீட்டு கீழே அழைத்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் தடையை மீறி மலை உச்சிக்கு சென்ற அஷ்கர், சல்மான், சைஹானுதீன், மகேஷ் ஆகிய 4 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மலையில் 4 மணி நேரம் சிக்கி தவித்த வாலிபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்