ராட்சத அலையில் சிக்கி நடுக்கடலில் படகு கவிழ்ந்தது; 9 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

குந்தாப்புராவில் ராட்சத அலையில் சிக்கி நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. இதில் 9 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2023-08-05 18:45 GMT

மங்களூரு:

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோடேரி பகுதியில் இருந்து அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க துர்கா பரமேஸ்வரி என்ற படகில் 9 மீனவர்கள் சென்றனர். அவர்கள் கோடேரி பகுதியில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் வலையை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ராட்சத அலை ஏற்பட்டுள்ளது.

இந்த ராட்சத அலையில் சிக்கி மீன்பிடி படகு நடுக்கடலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால், அந்த படகில் இருந்த மீனவர்கள் தவறி கடலுக்குள் விழுந்தனர். அவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்தனர்.

இதனை அறிந்ததும், அருகில் 6 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், கடலில் மூழ்கி தத்தளித்த 8 மீனவர்களை பத்திரமாக மீட்டு படகிற்கு கொண்டு வந்தனர். ஒருவர் மீன்பிடி வலையில் சிக்கி கொண்டார். நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அவரையும் மீனவர்கள் மீட்டு படகிற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் 9 பேரையும் சக மீனவர்கள் தங்கள் படகில் கரைக்கு அழைத்து வந்தனர். மேலும், கடலில் மூழ்கிய படகையும் கயிற்றால் கட்டி மரவந்தே மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து கடலில் மூழ்கிய 9 மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் மீன்பிடி வலைகள் கடலில் மூழ்கியது. மேலும் படகும் சேதம் அடைந்திருந்தது. இதனால் சுமார் ரூ.1½ லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் 31-ந்தேதி உப்புந்தா பகுதியில் ராட்சத அலையில் சிக்கி நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 2 மீனவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்