உத்தரகாண்ட்: பணமோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் மந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்
பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக முன்னாள் வனத்துறை மந்திரி ஹரக் சிங் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.;
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பட் தேசிய பூங்காவில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது மற்றும் மரங்களை வெட்டியது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பான பணமோசடி வழக்கு குறித்த விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 29-ந்தேதி நேரில் ஆஜராக முன்னாள் வனத்துறை மந்திரி ஹரக் சிங் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் வேறு சில பணிகள் இருப்பதால் நேரில் ஆஜராவதற்கு அவகாசம் கோரியிருந்தார்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 2-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு ஹரக் சிங் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பா.ஜ.க. அரசின் கீழ் வனத்துறை மந்திரியாக பதவி வகித்த ஹரக் சிங் ராவத், கடந்த 2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எதிர்வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஹரக் சிங் ராவத் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.