பொம்மை துப்பாக்கியை காட்டிய ஆத்திரத்தில் சாக்ஷி படுகொலையா...? உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி; அதிர்ச்சி தகவல்

டெல்லியில் சிறுமி சாக்ஷி கொலையான விவகாரத்தில் அவரது குடும்பத்தினரை பா.ஜ.க. எம்.பி. ஹன்ஸ்ராஜ் நேரில் சந்தித்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார்.

Update: 2023-05-30 11:04 GMT

புதுடெல்லி,

டெல்லியில் தோழியின் மகன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்த சாக்ஷி என்ற 16 வயது சிறுமியை, ஷாபாத் டெய்ரி பகுதியில், அவரது வீடு அருகே, சாஹில் என்ற 20 வயது நபர் 16 முறை கத்தியால் குத்தியும், சரிந்து விழுந்த சிறுமியை பெரிய கல்லை கொண்டு தாக்கியும் கொடூர கொலை செய்து உள்ளார்.

அந்த வழியே சென்றவர்கள், கண்டும் காணாததுபோல் அவர்களது பணியில் கவனம் செலுத்த சென்று விட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சிறுமி தற்காப்புக்காக, பொம்மை துப்பாக்கியை எடுத்து சாஹிலை நோக்கி காட்டினார் என்றும் இதில், ஆத்திரமுற்ற சாஹில் சிறுமியை கொலை செய்து உள்ளார் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், டெல்லியில் விசாரணை நடத்திய பின்னரே உறுதியான விவரங்கள் தெரிய வரும்.

இந்த சம்பவத்தில் சிறுமியின் குடும்பத்தினரை பா.ஜ.க. எம்.பி.யான ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை இழப்பீடு தொகையாக வழங்கி உள்ளார்.

இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஹன்ஸ்ராஜ், இந்த பயங்கர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டார். அவரது பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் மகள்களின் நல்வாழ்வுக்காக எப்போதும் முன்னோக்கி செயல்பட்டு கொண்டிருக்கிறார் என ஹன்ஸ்ராஜ் கூறியுள்ளார்.

போலீசிடம் நான் பேசி இருக்கிறேன். நீங்கள் ஒரு பெற்றோர் என்றால், உங்களால் முழு காணொலியையும் பார்க்க முடியாது. உங்களால் தூங்கவும் முடியாது என எம்.பி. ஹன்ஸ்ராஜ் கூறியுள்ளார்.

சுற்றியிருந்தவர்கள், குற்றவாளியை ஏன் பிடிக்க முயற்சிக்கவில்லை? என ஹன்ஸ்ராஜ் ஆத்திரம் வெளிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில், பிரதமர் மோடி அரசை கட்சிகள் விமர்சிப்பது பற்றி அவர் பேசும்போது, இதுபோன்ற ஒரு சோகத்திற்கு பின்பு அரசியல் செய்யும் எந்தவொரு கட்சியும் வெட்கக்கேடானது.

நிறைய மக்கள் சம்பவத்தின்போது இருந்தனர். அந்நபரை அவர்கள் பிடித்து இருக்க வேண்டும். அந்த காணொலியை பார்க்கும்போது வலியை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.

இந்த வழக்கில், சாஹிலுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி கோர்ட்டு இன்று உத்தரவிட்டு உள்ளது. சிறுமியின் இறுதி சடங்குகள் இன்று நடந்தன. தங்களது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்