ஐஸ்கிரீமில் விஷம் கலந்து 2 குழந்தைகளை கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு

குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-25 09:31 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 30). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்த ஷில்பா என்ற சுகமதி (24). பி.எஸ்சி பட்டதாரி. இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு சஞ்சனாஸ்ரீ (6), க்ரிஷிகா (1) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். சஞ்சனாஸ்ரீ அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி சிறு சிறு பிரச்சினைகள் வந்துள்ளது. சில நேரங்களில் அது கைகலப்பாகவும் மாறியது உண்டாம். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷில்பா, கோகுலை தாக்கியதாக கூறப்படுகிறது.

மனைவி நம்மை அடித்து விட்டாளே என வேதனை அடைந்த கோகுல், அந்த பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து கடந்த ஒரு மாதமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

ஒன்றிரண்டு நாட்கள் பொறுத்த ஷில்பா, கணவரை தொடர்பு கொண்டு நாம் சேர்ந்து வாழலாம் வாருங்கள் என்று அழைத்துள்ளார். அதற்கு கோகுல் என்னை ஏன் அடித்தாய்? என்று கேட்டுள்ளார். இப்படியாக ஒரு மாதம் கடந்து விட்டது.

நேற்று முன்தினம் காலையில் இருந்தே ஷில்பா, கணவரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் கோகுல் செல்போனை எடுத்து பேசவில்லையாம். காதல் கணவனே நம்மிடம் பேசவில்லை. இனி நாம் யாருக்காக உயிருடன் இருக்க வேண்டும் என்று மனம் உடைந்த ஷில்பா வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். தொடர்ந்து தானும் அதே ஐஸ்கிரீமை சாப்பிட்டுள்ளார். பின்னர் அவர் வழக்கம் போல் குழந்தைகளுடன் தூங்க சென்றுள்ளார். நேற்று காலையில் ஷில்பா வீட்டுக்கு அவருடைய தந்தை சென்றுள்ளார். அப்போது வீட்டுக்கதவு திறந்து கிடந்ததாம். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு ஷில்பா, அவருடைய 2 குழந்தைகள் பிணமாக கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஷில்பாவின் தந்தை கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்