குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவிலில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது 13½ பவுன் நகைகள் மீட்பு

குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவிலில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-06 18:45 GMT

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியில் பிரசித்திபெற்ற செங்கழனி மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2-ந்தேதி நள்ளிரவில் இக்கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 14 பவுன் நகைகள், 40 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி போலீசார் நேற்று குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சி பேட்டை குறுக்குரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் போலீசாரை பார்த்ததும், சற்று முன்னதாக திரும்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கடலூர் கூத்தப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் மகன் சுகன் என்கிற சுகன்ராஜ் (வயது 24), கடலூர் குமாரபேட்டை புதுநகரை சேர்ந்த கலியபெருமாள் மகன் ஹரி என்கிற அரவிந்த் (22) ஆகியோர் என்பதும், கடந்த 2-ந்தேதி விழப்பள்ளம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து அம்மன் நகைகளை கொள்ளையடித்துச் சென்று கடலூர் அடுத்த எம்.புதூரில் பாழடைந்த மோட்டார் கொட்டகையில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுகன்ராஜ், அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் கொட்டகையில் மறைத்து வைத்திருந்த 13½ பவுன் நகைகளை மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்