525 மின்சார பஸ்களை தமிழக அரசு வாங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

525 மின்சார பஸ்களை தமிழக அரசு வாங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2019-11-22 09:58 GMT
சென்னை

சமீபகாலமாக போக்குவரத்துக்கழகம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. போக்குவரத்து கழகங்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்கவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களையும் கருத்தில் கொண்டு மின்சார பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.

மின்சார பஸ்களின் விலை சற்று அதிகம் என்ற போதிலும், இதுபோன்ற பஸ்களை இயக்க ஆகும் செலவு மிகவும் குறைவு என்பதாலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதை கருத்தில் கொண்டும் மின்சார பஸ்களை இயக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது.

 போக்குவரத்து கழகங்களை மறு கட்டமைப்பின் மூலம் நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மின்சார பஸ்களையும், 12 ஆயிரம் பி.எஸ்.-4 வகை பஸ்களையும் வாங்குவதற்கு தமிழக அரசு முடிவெடுத்தது.

முதற்கட்டமாக 100 மின்சார பஸ்கள் ஜெர்மனி நாட்டின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் வாங்கப்பட உள்ளது. இதில் 80 பஸ்கள் சென்னையிலும், 10 பஸ்கள் மதுரையிலும், 10 பஸ்கள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன

525 மின்சார பஸ்களை  தமிழக அரசு வாங்கும்  திட்டத்திற்கு  மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், மின்சார பஸ்களை வாங்க பெருநகர போக்குவரத்துக் கழகத்திற்கு (எம்.டி.சி)  இன்னும் அனுமதி வழங்காததால்  இதற்காக காத்திருக்க வேண்டியது இருக்கும்.

போக்குவரத்து செயலாளர் பி. சந்திரமோகன் தலைமையிலான போக்குவரத்து நிறுவனங்களின் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில்  வருவாய் பெருக்குதல், பயணிகளின் வளர்ச்சியை மேம்படுத்துதல், வழங்கப்படாத ஓய்வூதியத்தை வழங்குதல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநிலத்தில் திட்டமிடப்பட்ட மின்சார பஸ்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

எம்டிசி தவிர, தமிழக போக்குவரத்து நிறுவனங்களுக்கு 525 மின்சார பேருந்துகள் வாங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது என போக்குவரத்து கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்